Wednesday, May 13, 2015

பித்தம் குறைக்கும் மாதுளம் பூ

        பித்தம் குறைக்கும்  மாதுளம் பூ 


மாதுளை என்பது கனிவகைகளில் ஒன்று என்பதை நாம் அனைவருமே அறிவோம். பெரும்பாலும் மாதுளம் பழத்தை உண்பதற்கு பயன்படுத்தி வரக்கூடிய நாம், மாதுளையின் பூக்களிலே அதிக மருத்துவ குணம் உண்டு 

மருத்துவப் பயன்

  மாதுளம்பூவினை எடுத்து, நிழலில் உலர்த்தி, நன்கு பொடியாக செய்து வைத்துக் கொண்டு, தேனிலோ அல்லது பசும்பாலிலோ கலந்து தினசரி காலை-மாலை என இருவேளையும் அருந்தி வரலாம். இதனால் பசி நன்கு தூண்டப்பட்டு, உண்ட உணவு நன்கு சீரணமாகும். நோய் எதிர்ப்பாற்றல் நன்கு வளரும். இதனால் உடலை நோய் அண்டாமல் பாதுகாக்கலாம். உடலும் வன்மை பெறும்.


இருமல் குறைய

  மாதுளையின் இளம்பூவினை உலர்த்தி, நன்கு பொடி செய்து, 100 மி.கி. அளவு, காலை-மாலை இருவேளை வெந்நீரில் கொடுக்க இருமல் நீங்கும்.

வாந்தி நிற்க

  இயல்பாகவே பித்தத்தை சமப்படுத்தும் தன்மை உடைய மாதுளம்பூ  என்பதால் வாந்திக்கு இதனை பயன்படுத்தலாம்.

கழிச்சல் குறைய

  மாதுளம்பூ குடலில் சென்று, நன்கு செயல்படக்கூடிய தன்மை வாய்ந்தது என்பதால் இதனை பெருங்கழிச்சல், நாட்பட்ட சீதக்கழிச்சல் நோய்க்கு பயன்படுத்தலாம்.

  ஏலக்காய் தூள், கசகசா தூள் இவை 2ம் சம அளவு எடுத்து, மாதுளம்பூ வின் பொடியுடன் சேர்த்து 50 மி.கி. அளவு, உணவிற்கு பின் இருவேளை அருந்த வேண்டும். இதனால் கழிச்சல் நோய் குணமாகும்.

தொண்டைப் புண் குறைய 

 தொண்டைப் புண்ணோ (அ) தொண்டையில் வலியோ  இருந்தால் மாதுளம்பூ விவையும், அருகம்புல்லையும் சம அளவு சேர்த்து, நன்கு இடித்து, குடிநீரில் (கஷாயம்) இதனுடன் சிறிதளவு பொரித்த வெங்காயம் சேர்த்து வாய் கொப்பளித்து வர, இவை குணமாகும்.

இரத்த மூலம் நீங்க

   இளம்பூ வினை உலர்த்தி சூரணம் செய்து, அதனுடன் கருவேலம் பிசினையும் சேர்த்து உள்ளுக்கு அருந்த இரத்த மூலம் நீங்கும்.

பெண்களுக்கு

  மாதுளம்பூ வினை கற்கண்டு கூட்டி உண்ண, பெண்களுக்கு உண்டாகும் அதிக குருதிப்போக்கு குறையும்.

  மாதுளை மணப்பாகுடன், மாதுளம்பூ வினை உலர்த்தி பொடியாக்கி சேர்த்து உண்ணலாம். இதனால் உடல்சூடு தணியும்.

குழந்தைகளுக்கு

   சிறு குழந்தைகள் சரிவர உணவு உண்ணாமல் அடம் பிடித்தால், அக்குழந்தைகளுக்கு மாதுளம்பூ வின் பொடியை தேனில் கலந்து, உள்ளுக்கு கொடுக்கலாம். பாலுடன் கலந்தும் தரலாம். இதனால் பசி தூண்டப்பட்டு, உணவு நன்கு சீரணமாகும். குழந்தைகளின் மாந்தம் குறையும்.

 இத்தகைய மகத்துவம் மிக்க மாதுளம்பூ , வேறெந்த மருத்துவ முறைகளைக் காட்டிலும், நமது சித்த மருத்துவ முறையில் தான் அதிக அளவு கூறப்பட்டுள்ளது. இதனை நாமும் அறிந்து, நன்கு பயன்படுத்தி, அனைவரும் உடல் வன்மையைப் பெற வேண்டும்.



No comments:

Post a Comment