Wednesday, October 30, 2013

இளமையைக் காப்பதில் நவ்காசனம்

மனிதனின் உடலும் உள்ளமும் சீராக இருந்தால்தான் நீண்ட ஆரோக்கியத்தைப் பெற முடியும்.

இன்றைய நவீன சூழலில் மன அழுத்தம், கோபம், பயம், எதிர்கால நம்பிக்கையின்மை, பொறுமையின்மை, குறுக்கு வழியில் முன்னேறத் துடிப்பு என பல வகையில் இளைய தலை முறையினர் மாட்டிக்கொண்டு தவிக்கின்றனர்.

இவர்கள்,  தாங்கள் சாம்பாதிக்கும் பணம் வாழ்வின் அனைத்து சந்தோஷத்தையும் கொடுத்துவிடும் என்று எண்ணி இரவைப் பகலாக்கி உழைக்கின்றனர்.


மூளைக்கு வேலை கொடுப்பது மட்டுமே சிறந்தது என எண்ணி பொருள் தேடி கடைசியில் நோயின் பிடியில் சிக்கி மருந்து மாத்திரை என காலத்தைக் கழிக்கின்றனர்.    இத்தகைய மக்களின் பிரச்சனையைத் தீர்க்க இன்று பல இடங்களில் உடற்பயிற்சி கூடங்களும் யோகா பயிற்சி மையங்களும் அதிகம் முளைத்துள்ளன.

நீண்ட ஆரோக்கியம் பெற தினமும் அரை மணி நேரமாவது யோகா, தியானம் செய்வது சாலச் சிறந்தது.


யோகாவை பதஞ்சலி முனிவர் முதல் பல சித்தர்கள் வரை போதித்துள்ளனர்.  இவற்றில் நவ்காசனம் என்ற ஆசனமும் ஒன்று.

நவ்காசனத்தை படகு ஆசனம் என்றும் அழைக்கின்றனர்.  நவ்கா என்றால் படகு என்று அர்த்தம்.

செய்முறை


  • விரிப்பின் மீது கால்களை  நீட்டி மல்லாந்து படுத்துக்கொள்ளவும்.
  • இரண்டு கால்களையும் படத்தில் காணப்படுவது போல் மெதுவாக மேலே தூக்கவும்.
  • அதேபோல் தலை, கழுத்தை மெதுவாக மேலே தூக்கவும்.  600  அளவுக்கு உயர்த்தவும்.  இது பார்க்க படகு நீரில் மிதப்பது போன்ற தோற்றத்தைக் கொடுக்கும்.
  • கைகளை நேராக நீட்டிக்கொள்ளவும்.  மூச்சை சாதாரண நிலையில் வைத்துக்கொள்ளவும்.


பயன்கள்


  •  வயிற்றுத் தசைகள், உள் உறுப்புகளுக்கு பயிற்சி கொடுப்பதால் அஜீரணக் கோளாறு, மலச்சிக்கல் போன்றவை நீங்கும்.
  • வயிற்றில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைவதால் தொப்பை குறையும்.  வயிற்றுக்குத் தேவையான இரத்தம் சீராகச் செல்லும். 
  •  கணையத்தைத் துண்டி கணைய நீரை அதிகம் சுரக்கச் செய்கிறது.  இதனால் நீரிழிவு நோய் போன்ற பாதிப்பிலிருந்து பாதுகாக்கிறது.
  •  நரம்புத் தளர்ச்சியைப் போக்கி உடலுக்கு வலு கொடுக்கிறது.
  • நுரையீரலைப் பலப்படுத்துகிறது.  இதனால் ஆஸ்துமா போன்ற நோய்களால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைகிறது.


இளமையைக் காப்பதில் இவ்வாசனம் பெரும்பங்கு வகிக்கிறது.

No comments:

Post a Comment