Tuesday, October 15, 2013

தானியத்தின் மகத்துவம் - நீரழிவு நோய்க்கு கேழ்வரகு

தானிய வகைகளில் கேழ்வரகு ஒரு சிறந்த தானயமாகும். நம் முன்னோர்கள் கேழ்பரகை களி, கூழ் செய்து உண்டு வந்தார்கள். கேழ்வரகு கூழ் மிகவும் சுவையானது

ஏழைகளின் உணவு என்பதால் செல்வந்தர்கள் பலர் கேழ்வரகை தவிர்த்து வந்தனர். ஆனால் இன்று செல்வந்தர்கள் கேழ்வரகை தேடி அலைகின்றனா. இதற்கு காரணம் நீரழிவு நோயின் தாக்கமே. நீரிழிவு நோயின் பாதிப்புகளில் இருந்து விடுபட வைக்கும் உணவு வகைகளில் கேழ்வரகு ஒன்று.
Bot.Name - Eleucine Coracana

கிராமங்களில் வாழும் விவசாய மக்களின் முக்கிய உணவு கேழ்வரகு இந்த உணவால் உடல் வருப்பெற்று நோய்களின் தாக்கமின்றி ஆரோக்கியமாக வாழ்ந்தனர். வாழ்ந்தும் வருகின்றனர். இந்த கேழ்வரகு மருத்துவக் குணங்கள் பற்றி அறிந்து கொள்வோம்.


கேழ்வரகை ராகி, கேவுரு,கேப்பை என்ற பெயர்களில் அழைக்கின்றனர். கேழ்வரகில் கால்சியம், இரும்புச்சத்து மற்றும் மெத்தியோனைன் என்று அழைக்கப்படும் அமினோ அமிலம் நிறைந்துள்ளது.

100 கிராம் கேழ்வரகில் உள்ள சத்துக்கள்:


  • புரோட்டின்        - 7.3 கிராம்
  • கொழுப்பு        - 1.3 கிராம்
  • மாவுப்பொருள்        - 72 கிராம்
  • தாதுப்பொருள்        - 2.9 கிராம்
  • கால்சியம்        - 3.44 கிராம்
  • நார்ச்சத்து        - 3.6 கிராம்
  • இரும்புச் சத்து        -  3.8 கிராம்

சுத்த அனிரந்தன்னைத் தோற்றுவிக்கும் அல்லவெனில் 
பித்தவெனி லத்தைப் பிறப்பிக்குஞ் - சித்ரமலர்த்
தாழ்குழலே நீடுபஞ்சந் தாங்கியெனச் சொல்லுகின்ற
கேழ்வரகின் செய்தியிது கேள்   - அகத்தியர் குணபாடம்

நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு

இன்று நம் தென்னிந்தியாவில் 40 வயதிற்கு மேற்பட்டவர்களில் 64 சதவிகிதம் பேர் நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்குக் காரணம் தென்னிந்திய மக்களின் உணவு வகைகளில் ஏற்பட்ட மாற்றமும் கேழ்வரகு, கம்பு, கோதுமை போன்றவற்றை தவிர்த்த தன் விளைவுதான்
கேழ்வரகு உடலின் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கும். அதனால் சர்க்கரை நோய் உள்ள அனைவரும் உண்பது நல்லது. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கேழ்வரகு மாவை நீர்விட்டு நன்கு கிளறி கொதிக்க வைத்து கூழாக்கி வைத்து கூழாக்கி சாப்பிடலாம். அல்லது தோசை, ரொட்டி செய்து சாப்பிடலாம். கேழ்வரகு கூழுடன் மோர், சின்ன வெங்காயம் கலந்து தினமும் காலை உணவாக உண்டு வந்தால் நீரழிவு நோயின் தாக்கம் எளிதில் குறையும்.

உடல் வலுப்பெற:

கேழ்வரகை பஞ்சந்தாங்கி என்று அழைப்பார்கள். தினமும் ஒரு வேளை உணவாக கேழ்வரகு சாப்பிட்டு வந்தால் உடல் வலுப்பெறும். இது எளிதில் செரிமானம் ஆகாது. உடல் உழைப்பு அதிகம் உள்ளவர்கள் சாப்பிட்டால் எளிதில் செரிமானம் ஆகும். உடலுக்குத் தேவைப்படும் அனைத்து சத்துக்களும் சீரான அளவில் கிடைக்கும்.

பித்த சம்பந்தப்பட்ட நோய்களைத் தடுக்க:

மனித உடலில் வாதம், பித்தம், கபம் என மூன்று கூறுகள் உள்ளன. இவை மூன்றம் சரியான அளவில் இருக்க வேண்டும். மாறி இருந்தால் உடலில் பல பாதிப்புகள் உண்டாகும். இவற்றில் பித்தம் மேலோங்கினால் பித்த சம்பந்தப்பட்ட நோய்களின் தாக்கம் அதிகரிக்கும். பித்தத்தை சமப்படுத்தும் குணம் கேழ்வரகுக்கு உண்டு.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க:

கேழ்வரகை நன்கு அரைத்து சலித்து மாவாக்கி அதனை களி, கூழ், ரொட்டி, புட்டு இதில் எராவது ஒன்றாக செய்து சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

உடல் சூட்டை தணிக்க:

கேழ்வரகு மாவை நொய்யாக உள்ள அரிசியோடு சேர்த்து நன்றாக வேகவைத்து அதனை சிறு உருண்மையாக உருட்டி நீரில் போட்டு ஊறவைத்து பின் அதனை மோரில் கரைத்து அதனுடன் கறிவேப்பிலை, கொத்தமல்லி, சீரகம், சின்ன வெங்காயம் இவற்றை சிறிது சிறிதாக நறுக்கிப் போட்டு மதிய வேளையில் குடித்து வந்தால் உடல் சூடு தணிவதுடன் உடல் நன்கு பலப்படும்.

குடற்புண் ஆற:

குடற்புண் (அல்சர்) பாதிப்பு ஏற்பட்டவர்கள் தினமும் கேழ்வரகு கூழ் செய்து சாப்பிட்டு வந்தால் குடற்புண் ஆறும்.

வெப்பக் கட்டிகளுக்கு:

கேழ்வரகு மாவை நீர்விட்டு குழைத்து கட்டிகளின் மேல் பற்று போடடால் வெப்பக் கட்டிகள் விரைவில் பழுத்து உடையும்.

சரும பளபளப்புக்கு:

சருமம் பாதிக்கப்படாமல் இருந்தால்தான் மனிதனால் ஆரோக்கியமான உடலைப் பெறமுடியும். கேழ்வரகை கஞ்சியாக சாப்பிட்டு வந்தால் சருமம் பாதுகாப்பதுடன் பளபளப்பாகவும் இருக்கும்.

சிறு குழந்தைகளுக்கு:

கேழ்வரகு மாவுடன் சர்க்கரை, பால் சேர்த்து கூழாகக் காய்ச்சி குழந்தைகளுக்கு கொடுத்துவந்தால் குழந்தையின் வளர்ச்சி நன்றாக இருக்கும்.

கேழ்வரகு தினமும் உணவில் சேர்த்து ஆரோக்கியமான உடலைப் பெறுவோம்.     

No comments:

Post a Comment