Tuesday, October 15, 2013

பூவின் மருத்துவம் - சாமந்திப்பூ மருத்துவக் குணம்

இயற்கையின் உன்னதப் படைப்பில் அனைத்தும் அழகே..
அதிலும் மகத்துவமானது மலர்கள்....

ஒவ்வொரு விதமான பூவிலும் ஒவ்வொருவிதமான மணமும், மருத்துவக் குணமும் நிறைந்துள்ளது. இதனால்தான் நம் முன்னோர்கள் பூக்களை பூஜைக்குரிய பொருளாக்கினர்.

Botanical name - Chrysanthemum coronarium

இதுபோல் மலர்களிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் வாசனை திரவியங்களாக பயன்படுத்தப்படுகின்றன. இத்தகைய சிறப்பு வாய்ந்த பூக்களில் செவ்வந்திப்பூ என அழைக்கப்படும் சாமந்திப் பூவின் மருத்துவக் குணங்களை அறிந்துகொள்வோம்.

செவ்வந்திப்பூவை சாமந்திப்பு, சிவந்திப்பூ என பலவாறு அழைக்கின்றனர்.





இந்தியா முழுவதும் வளரக் கூடிய தன்மை வாய்ந்தது. இதனால் இதை அதிக இடங்களில் பயிரிடுகின்றனர். இது மஞ்சள், சிவப்பு, ஆரஞ்சு, வெள்ளை, நீலம் போன்ற நிறங்களில் பூக்கும். இவற்றோடு சீமைச் சாமந்திப்பூ என வேறொரு பிரிவும் உண்டு. ஆனால் இவற்றின் மருத்துவக் குணங்கள் அனைத்தும் ஒன்றே.

மனதோடு தொடர்புடைய பூக்களில் இதுவும் ஒன்று. மனிதனுக்கு ஏற்படும் கோபதாபங்கள், எரிச்சல், விரக்தி, பயம் போன்றவற்றை போக்கும் குணம் செவ்வந்திப்பூவிற்கு உண்டு. மன அழுத்தம், மன உளைச்சல் உள்ளவர்கள் இந்தப் பூவை கையில் வைத்துக்கொண்டு அதன் அடுக்குகளை சிறிது நேரம் உற்று நோக்கினால் மன அழுத்தம் மெல்ல மெல்ல விலகி மனம் இலேசாகுவதுபோல் தோன்றும்.

தலைவலி நீங்க

உடலில் எத்தகைய பாதிப்பு ஏற்பட்டாலும் அதன் பாதிப்பு முதலில் தலைவலியாகத்தான் வெளிப்படும். இந்த தலைவலி நீங்க செவ்வந்திப் பூவின் இதழ்களை நிழலில் உலர்த்தி பொடி செய்து தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் தலைவலி நீங்கும்.

மலச்சிக்கல் தீர

மலச்சிக்கல்தான் நோயின் முதல் அறிகுறி. மலச்சிக்கல் என்பது மலம் வெளியேறாமல் இருப்பது மட்டுமல்ல, மலம் அடிக்கடி வெளியேறுவதும் அல்லது சிறுகச் சிறுக வெளியேறுவதும் மலச்சிக்கலின் காரணம்தான். இவர்கள் சாமந்திப் பூவை கசாயம் செய்து அதனுடன் பனை வெல்லம் கலந்து அருந்தினால் மலச்சிக்கல் தீரும்.

உடல் சூடு நீங்க

உடல் சூடானால் பல நோய்களுக்கு ஆளாக நேரிடலாம். இத்தகைய உடல் சூடு மாற செவ்வந்திப் பூவை கசாயம் செய்து அருந்தி வந்தால் உடல் சூடு நீங்கும்.

உடல் வலுப்பெற


சிலருக்கு எவ்வளவுதான் உணவருந்தினாலும் உடல் எடை கூடாமல் மெலிந்தே இருப்பார்கள். எப்போதும் சோர்வாக தோன்றுவார்கள். இவர்கள் சாமந்திப் பூவின் இதழ்களை காயவைத்து பொடி செய்து தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் பலம் பெறும். அடிக்கடி சோர்வு ஏற்படாது.

சுளுக்கு வீக்கங்களுக்கு

சாமந்திப் பூவின் இதழ்களை நீரில் கொதிக்கவைத்து அந்த நீரை சுளுக்கு வீக்கம் உள்ள பகுதிகளில் ஒற்றடம் கொடுத்து வந்தால் சுளுக்கு வீக்கம் விரைவில் குறையும்.

சூதகக்கட்டு, சூதகச் சன்னி மாற

அரைலிட்டர் தண்ணீரில் 25 கிராம் அளவு நிழலில் உலர்ந்த சாமந்திப் பூவை கொதிக்க வைத்து அதனுடன் சிறிது பனைவெல்லம் சேர்த்து அப்படியே மூடிவைத்து 15 நிமிடங்கள் கழித்து வடிகட்டி அருந்தி வந்தால் சூதகக் கட்டு, சூதகச் சன்னி, குளிர்சுரம் எளிதில் குணமாகும். தினமும் இருவேளை என அருந்துவது நல்லது.

சிறுநீர் பெருக்கி

சாமந்திப் பூவை நீரில் கொதிக்க வைத்து குடிநீராக அருந்தி வந்தால் சிறுநீர் எளிதில் பிரியும்.

சாமந்திப் பூவிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய்

1 துளி முதல் 5 துளி அளவு எடுத்து சர்க்கரை கலந்து சாப்பிடலாம். மேலும் இந்த எண்ணெயை கீல்வாயு, வீக்கம் முதலியவற்றிற்கு மேல்பூச்சாக பூசலாம்.

No comments:

Post a Comment