Monday, July 14, 2014

வயிற்றுக் கடுப்பு நீங்க இலவங்கப் பட்டை

சமையல் அறையில் நம் முன்னோர்கள் ஒரு வைத்திய சாலையையே வைத்திருந்தார்கள். அஞ்சறைப் பெட்டி அருமருந்துகளின் பெட்டகமாகவே இருந்துள்ளது.


சீரகம், சோம்பு, வெந்தயம், கடுகு, மிளகு, இலவங்கப்பட்டை, கசகசா என பல மருத்துவப் பொருட்களை அன்றாட உணவில் சேர்த்து ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அடித்தளம் அமைத்தவர்கள்தான் நம் முன்னோர்கள்.


தற்போது உணவே மருந்து மருந்தே உணவு என்ற கோட்பாடு தலைதூக்கி பல்வேறு வகைகளில் இதை பாடங்களாகவும், ஆலோசனைகளாகவும் செய்துவருகின்றனர். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்ற பழமொழிக்கேற்ப இந்த குறைவற்ற செல்வத்தைப் பெற உணவில் மேற்கூறிய பொருட்களை சேர்ப்பது நல்லது.

கருவாப் பட்டை என அழைக்கப்படும் இலவங்கப் பட்டையைப் பற்றி தெரிந்துகொள்வோம்.

இந்த இலவங்கப்பட்டை செடியானது இலங்கைக்கும், இந்தியாவிற்கும் உரிய பயிராகும். இந்தியாவில் கேரளா பகுதிகளில் அதிகம் காணப்படுகின்றது. இலவங்கப் பட்டை உற்பத்தியில் இலங்கையே முதன்மை வகிக்கிறது. இலங்கை, மேற்கு மலேசியாவின் சாபா, சரவா பகுதிகளிலும் தாய்லாந்தின் வடக்குப் பகுதியிலும் இது உற்பத்தி செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப் படுகின்றது.

இதன் பட்டை அரக்கு நிறத்தில் காணப்படும். காரமும் இனிப்பும் கலந்த சுவையுடன் இருக்கும்.

Tamil - Lavangapattai

English - Cinnamon

Malayalam - karuvapatta

Telugu - Lavangapatta

Sanskrit - Twak

Hindi - Dalchini

BotanicalName - Cinnamomum verum

தாதுநட்டம் பேதி சருவவிஷம் ஆகியநோய்

பூதகிர கஞ்சிலந்திப் பூச்சிவிடஞ்-சாதிவிடம்

ஆட்டுமிரைப் போடிருமல் ஆகியநோய்க் கூட்டமற

ஓட்டுமில வங்கத் துரி

சன்னலவங் கப்பட்டை தான்குளிர்ச்சி யுண்டாக்கும்

இன்னுமிரத் தக்கடுப்பை யீர்க்குங்காண்-முன்னமுறும்

உந்திக் கடுப்பகற்றும் உண்மூலப் புண்போக்கும்

கந்தமிகு பூங்குழலேகாண்           
                                          அகத்தியர் குணபாடம்

லவங்கப்பட்டையை கறிமசாலாவில் அதிகம் சேர்ப்பார்கள். இது அதிக சுவையையும், மணத்தையும் தரக்கூடியது.

நீரிழிவு நோய்க்கு

நீரிழிவுக்குக் கொடுக்கப்படும் மருந்துகளில் லவங்கப்பட்டை அதிகம் சேர்கிறது.

வாய் துர்நாற்றம் நீங்க

வயிற்றில் புண்கள் இருந்தால் அதன் பாதிப்பு வாயில்தான் தெரியவரும். இவர்களின் வாயிலிருந்து ஒருவிதமான துர்நாற்றம் வீசும். இந்த துர்நாற்றம் மாற அன்றாட உணவில் லவங்கப்பட்டையைச் சேர்த்து வந்தால் வயிற்றுப்புண், குடல்புண் ஆறி வாய் துர்நாற்றம் நீங்கும்.

செரிமான சக்தியைத் தூண்ட

எளிதில் சீரணமாகாத உணவுகளை உண்பதால் அஜீரணக் கோளாறு ஏற்பட்டு மலச்சிக்கல், வாயுத்தொல்லை, குடல்புண், மூலநோய் போன்ற நோய்கள் உண்டாகும். அன்றாட உணவில் சேர்க்கும் கறிமசாலையில் லவங்கப்பட்டையையும் சேர்த்து அரைத்து சமைத்து சாப்பிட்டு வந்தால் செரிமான சக்தி அதிகரித்து வயிற்றில் புண்கள் ஏற்படாமல் காக்கும்.

இருமல், இரைப்பு

சளித்தொல்லையால் சிலர் வறட்டு இருமலுக்கு ஆளாக நேரிடும். காச நோய் உள்ளவர்களும் இருமல் தொல்லைக்கு ஆளாவார்கள். இவர்கள் இலவங்கப் பட்டையுடன் சுக்கு, சோம்பு, வாய்விடங்கம், கிராம்பு இவற்றில் வகைக்கு 5 கிராம் அளவு எடுத்து 1 லிட்டர் நீர் விட்டு கொதிக்கவைத்து அது 250 மி.லி.யாக அதாவது நான்கில் ஒரு பங்காக வற்றவைத்து வடிகட்டி கஷாயம் போல் செய்து காலை, மாலை இருவேளையும் அருந்திவந்தால் இருமல், இரைப்பு மேலும் வயிற்றுவலி, பூச்சிக்கடி போன்றவை குணமாகும்.

விஷக்கடிக்கு

சிலந்திக்கடி மற்றும் விஷப் பூச்சிகள் தாக்கினால் இலவங்கப்பட்டையை அரைத்து கடிபட்ட இடத்தின் மீது பற்றுப் போட்டு வந்தால் விஷம் முறியும்.

வயிற்றுக் கடுப்பு நீங்க

வயிற்றுக் கடுப்பால் அவதியுறுபவர்களுக்கு சில சமயங்களில் வாந்தி உருவாகும். வயிற்றில் பயங்கரமான வலி உண்டாகும். இவர்கள் இலவங்கப்பட்டை, ஏலக்காய், சுக்கு இவைகளை பொடித்து சலித்து எடுத்துக்கொண்டு அதனுடன் தேன் கலந்து காலை மாலை இருவேளையும் சாப்பிட்டுவந்தால் வயிற்றுக்கடுப்பு, வயிற்றுவலி, வாந்தி போன்றவை குணமாகும். உடலுக்கும் புத்துணர்வை உண்டாக்கும்.

பெண்களுக்கு

குழந்தை பிறந்தவுடன் தாய்க்கு கருவாப்பட்டை கஷாயம் செய்து கொடுத்து வந்தால் கருப்பை வெகு விரைவில் சுருங்கி சாதாரண நிலைக்கு வரும். அதிக உதிரப்போக்குள்ள பெண்களுக்கும்இது சிறந்த மருந்து.

தாது விருத்திக்கு

தாது நட்டம் உள்ளவர்கள் இன்று பகட்டு விளம்பரங்களை நம்பி ஏமாந்து பணத்தைத் தொலைத்துக்கொண்டிருப்பார்கள். இவர்கள் இலவங்கப் பட்டையை தினமும் ஏதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்து வந்தால் இழந்த தாதுவை மீண்டும் பெறலாம்.


இத்தகைய அரிய பயன்களைக் கொண்ட கருவாப்பட்டையை இனியும் ஒதுக்கலாமா... முன்னோர்களின் வழியைப் பின்பற்றி நாமும் நோயின்றி நூறாண்டு வாழ்வோம்.

No comments:

Post a Comment